04/09/2026
உண்பதற்குத் தடுக்கப்பட்டவை
(தாமாகச்) செத்தவை, (ஓட்டப்பட்ட) இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவை ஆகியவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிபட்டவை, அடிபட்டவை, (மேலிருந்து) உருண்டு விழுந்தவை, கொம்பால் முட்டப்பட்டவை, வேட்டையாடும் பிராணிகள் கடித்தவை ஆகியவற்றில் (அவை இறக்கும் முன்) நீங்கள் (முறைப்படி) அறுத்தவற்றைத் தவிர (இவற்றில் செத்தவையும்), பலிபீடங்களில் அறுக்கப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.) அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (தடுக்கப்பட்டுள்ளது.) இது பாவச் செயலாகும். இன்று இறைமறுப்பாளர்கள் உங்கள் மார்க்கத்(தை அழித்து விடலாம் என்ப)தில் நம்பிக்கையிழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன். பாவச்செயல் செய்யும் எண்ணமின்றிப் பசியால் யாரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டால் அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன். (5:3)
உண்பதற்குத் தடுக்கப்பட்டவை எவை என்பதனை இவ்வசனம் எடுத்துரைக்கிறது. இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள சிலவற்றுக்கான விளக்கம், நிர்ப்பந்தச் சூழலுக்கான சட்டம், இவ்வசனம் அருளப்பட்ட காலகட்டம் ஆகியவை தொடர்பாக வந்துள்ள நபிமொழிகளைக் காண்போம்.
தாமாகச் செத்த நீர்வாழ் உயிரினங்கள்:
தாமாகச் செத்தவை உண்பதற்குத் தடை செய்யப்பட்டவை என இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் விதிவிலக்கும் உள்ளது.
“கடல் நீரில் நாங்கள் உளூச் செய்யலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, “அதன் தண்ணீர் தூய்மையானதாகும். அதில் (தாமாகச்) செத்தவையும் அனுமதிக்கப்பட்டதாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவுத் (76), திர்மிதீ (64), நஸாயீ (59), இப்னுமாஜா (380), அஹ்மத் (8380)
அடிபட்டுச் செத்த பிராணிகள்:
அடிபட்டுச் செத்தவற்றை உண்பது கூடாது என இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. வேட்டையாடும்போது ஆயுதத்தின் கூர்மையான பகுதி தாக்காமல் பக்கவாட்டுப் பகுதி தாக்கிக் கொன்றாலும் அது அடிபட்டுச் செத்தவைகளில் அடங்கும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே. ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும்” என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! (வேட்டைக்காக) நான் எனது நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப்பட்ட பிராணிக்கு அருகில் எனது நாயுடன் மற்றொரு நாயையும் நான் காண்கிறேன்; அந்த மற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை; இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் சாப்பிடலாமா?)” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சாப்பிடாதே! நீ அல்லாஹ்வின் பெயர் கூறியது உனது நாயை அனுப்பும் போதுதான். மற்றொரு நாய்க்கு நீ அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை” என விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்கள்: புகாரி (2054), முஸ்லிம்(3899)
முறையாக அறுக்கப்பட்டவை :
முறையாக அறுக்கப்பட்டவற்றை உண்ண வேண்டும் என இவ்வசனம் கூறுகிறது. முறையாக அறுக்கப்படுதல் என்பதன் விளக்கத்தைப் பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரத்தத்தைச் சிந்தக் கூடியது எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு)விட்டால் அதை நீங்கள் உண்ணலாம். நகத்தாலும் பல்லினாலும் (அறுக்கப்பட்டதைத்) தவிர! நகங்கள் அபிசீனியர்களின் கத்திகளாகும். பல் என்பது எலும்பாகும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ராஃபிவு பின் கதீஜ் (ரலி), நூல்கள்: புகாரி (5503), முஸ்லிம் (3978)
(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பி வைத்து, அது (பிராணிகளைக்) கொன்று விட்டாலும் அதை நீங்கள் சாப்பிடலாம். (அந்தப் பிராணியை) நாய் சாப்பிட்டிருக்குமானால் அதை நீங்கள் சாப்பிடாதீர்கள். எனெனில் அது (அப்பிராணியை) தனக்காகவே வைத்துக் கொண்டுள்ளது” என்று கூறினார்கள். “எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; (அது வேட்டையாடித் திரும்பும் போது) அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் நாயைத்தான் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயர்) கூறி அனுப்பினீர்களே தவிர மற்றொரு நாயை பிஸ்மில்லாஹ் கூறி அனுப்பவில்லை” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்கள்: புகாரி (175), முஸ்லிம் (3900)
“நாங்கள் (கூரான) மூங்கில்களால் (ஒட்டகத்தை) அறுக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரத்தத்தை ஓடச் செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப் பட்டதைத் தவிர. அதைப் பற்றி (அது ஏன் கூடாது’ என்று) நான் உங்களுக்குச் சொல்கிறேன்: பல் என்பது எலும்பாகும்; நகங்கள், அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ராஃபிவு பின் கதீஜ் (ரலி), நூல்கள்: புகாரி (2488), முஸ்லிம் (3978)
அம்புகளால் குறி கேட்பது:
அம்புகள் (அல்அஸ்லாம்) மூலம் குறி கேட்பது தடுக்கப்பட்டுள்ளதாக இவ்வசனம் கூறுகின்றது. இது தொடர்பாக ஹதீஸ்களில் வந்துள்ள விளக்கத்தைப் பார்ப்போம்.
அல்அஸ்லாம் என்பது (அறியாமைக் காலத்தில்) தங்கள் விவகாரங்களில் ஒன்றை தேர்வு செய்ய பயன்படுத்தி வந்த குறிகேட்கும் அம்புகளாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் அபீ ரபாஹ்,
நூல்: தக்லீக்குத் தஃலீக், பாகம்: 4, பக்கம்: 204
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு ஆணையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இ(தைச் செய்த)வர்களை அல்லாஹ் அழிப்பானாக! அல்லாஹ்வின்மீது ஆணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்” என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (1601)
இந்த வசனம் எப்போது அருளப்பட்டது?
யூதர்களில் ஒருவர், (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் ஓதிக் கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப்பட்டிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், “இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்’ (5:3 என்பதே அந்த வசனமாகும்)” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமையில் அரஃபாப் பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும் போது தான் (இவ்வசனம் அருளப்பட்டது; அந்த நாளே பண்டிகை நாள்தான்)” என்றார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி), நூல்கள்: புகாரி (5503), முஸ்லிம்(5740)
நிர்ப்பந்தம் என்பதன் வரையறை
பாவச்செயல் செய்யும் எண்ணமின்றிப் பசியால் யாரேனும் நிர்ப்பந்திக்கப் பட்டால் அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன். (5:3)
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒரு பகுதியில் இருக்கிறோம். அப்போது எங்களுக்குப் பசி ஏற்படுகிறது. எங்களுக்கு எப்போது தாமாகச் செத்தவை அனுமதிக்கப்பட்டதாக அமையும்?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “காலையில் ஒரு குவளை பாலும், மாலையில் ஒரு குவளை பாலும் உங்களுக்குக் கிடைக்காமல், பிடுங்கித் தின்பதற்கு(ப் புற்பூண்டுகளும்) கிடைக்காமல் இருந்தால் அனுமதியாகும்” என்று பதிலளித்தார்கள்.
ஒரு மனிதர் (மதீனா பக்கத்திலுள்ள) அல்ஹர்ரா என்ற இடத்தில் தங்கியிருந்தார். அவருடன் அவர் மனைவியும் பிள்ளையும் இருந்தனர். அப்போது ஒரு மனிதர், “என்னுடைய ஒட்டகம் தொலைந்து விட்டது. அதை நீ கண்டால் அதைத் தடுத்து வைத்துக் கொள்” என்று கூறினார். அந்த ஒட்டகம் கிடைத்தது. ஆனால் அதற்குரிய உரிமையாளர் கிடைக்கவில்லை. அந்த ஒட்டகம் நோயுற்றது. அப்போது அவருடைய மனைவி, “அதை அறுங்கள்” என்றார். அவர் மறுத்து விட்டார். அது இறந்து விட்டது. “அதன் தோலை உரியுங்கள். அதன் கறியையும், அதன் கொழுப்பையும் காய வைத்து நாம் சாப்பிட்டுக் கொள்வோம்” என்று மனைவி சொன்னார். “இதுதொடர்பாக நபிகளாரிடம் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க மாட்டேன்” என்று அவர் கூறினார்.
நபிகளாரிடம் வந்து இதுதொடர்பாகக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உமக்குத் தன்னிறைவு தரும் அளவு வசதியுள்ளதா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். “அப்படியானால் அதை சாப்பிட்டுக் கொள்ளும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி),
நூல்கள்: அபூதாவுத் (3320), அஹ்மத் (19998)